Skip to main content

காடுவெட்டி சோழன் என்கிற....


10-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிக்கு வந்து 11-ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள் (கி.பி 985 -1014 )வரை அரசாண்ட ராஜராஜ சோழனை, அவனது புகழை அடுத்தடுத்த தலைமுறையினர் மறந்தே போயிருந்தனர். ஒரு கட்டத்தில் அப்படியொரு மன்னன் இருந்ததற்கான செவிவழி செய்திகள் கூட அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படாமல் 19ம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழகத்திற்கு/ தமிழர்களுக்கு ராஜராஜன் என்கிற பெயரே யாருக்கும் தெரியாமல் இருந்தது என்பதுதான் உண்மை.

ராஜராஜன் காலத்திற்குப் பிறகு சோழ அரசர்கள் தஞ்சையை ஏன் கைவிட்டார்கள் என்பதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஊகங்களை முன்வைத்தாலும் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பின்னாளில் ஜடாவர்ம சுந்தர பாண்டியனால் தஞ்சையும், அதன் கோட்டைகளும் அழிக்கப்பட்டதாக ஒரு தகவல் மட்டுமே நம்பும்படியாக இருக்கிறது.

1858-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் கிருஸ்துவ மதத்தைப் பரப்பவந்த George Uglow Pope (ஜி.யூ. போப்) என்பவர்தான் முதல் முறையாக தஞ்சை பெரிய கோவிலையும், அதைச் சுற்றியுள்ள மற்றபிற கோவில்களையும் தனது புத்தகத்தில் ஆவணப்படுத்தினார். அதன் படி அந்த காலகட்டத்தில் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய அரசனின் பெயர் “காடு வெட்டி சோழன்” என்றுதான் அறியப்பட்டிருந்தது.

1861 -ம் ஆண்டுதான் பிரிட்டீஷாரால் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம்(Archaeological Survey of India (ASI) ) துவங்கப்பட்டது. இதன் பின்னரே இந்தியாவெங்கும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் அதன் தகவல்களை சேகரிக்கும் பணி முறையாக துவங்கியது.

ஜெர்மனியைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளரான “Eugen Julius Theodor Hultzsch” என்பவர் 1886ம் ஆண்டு சென்னை மாகாண அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையில் பணியில் சேர்ந்த பிறகே, தென்னகத்தில் இருந்த கல்வெட்டுக்களைப் பற்றிய ஆய்வுகள் சூடுபிடித்தன. சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகளில் அவருக்கிருந்த பரிச்சயம் மற்றும் புலமை இந்த கல்வெட்டுக்களில் கூறப்பட்டிருந்த தகவல்களை தொக்குத்திட உதவியது.

இவ்வாறு தொகுக்கப்பட்ட தகவல்களை காலாண்டுக்கு ஒரு முறை ”Epigraphia Indica” என்ற பெயரில் புத்தகங்களாக வெளியிடப்பட்டன. 1882 முதல் 1977 வரை இந்த தொகுப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இவற்றில் மூன்றாவது முதல் ஒன்பதாம் தொகுதி வரை “Eugen Julius Theodor Hultzsch” தொகுப்பாசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (Vol III (1894–95), Vol IV (1896–97), Vol V (1898–99), Vol VI (1900–01), Vol VII (1902–03), Vol VIII (1905–06), Vol IX (1907–08) .

1987ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் “Eugen Julius Theodor Hultzsch” குழுவினரால் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு அதில் உள்ள தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டது. அந்த ஆய்வில்தான் இந்த கோவிலைக் கட்டிய அரசனின் பெயர் ”கோ ராஜகேசரிவர்மன் என்கிற ராஜராஜ தேவன்” என்பதே தெரியவந்தது.

தஞ்சை பெரிய கோவிலில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் தகவல்கள் புத்தகமாக “South Indian Inscriptions – II” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த கல்வெட்டுக்களில் கோவிலின் அமைப்பு, நிர்வாகம், கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள், பொருட்கள், சிலைகள் அவற்றை அளித்தவர்கள், கோவிலுக்கான வருமானம், அதை வசூலிக்க வேண்டிய முறை என பல்வேறு தகவல்கள் விரிவாக பொறிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னரே, பல்வேறு இடங்களில், கோவில்களில் கிடைத்த கல்வெட்டு தகவல்கள் ராஜராஜனைப் பற்றியும் சோழ வம்சத்தைப் பற்றியும் ஏராளமான தகவல்கள் நமக்குத் தெரியவந்தது.

ராஜராஜனின் கல்வெட்டுக்கள் கூறும் தகவல்களின் அடிப்படையில் ராஜராஜன் ஒரு தலைசிறந்த நிர்வாகி, தான தர்மங்கள் செய்தவர், எல்லா மதத்தினரையும் ஆதரித்தவர் போன்ற புகழ் பிம்பம் உருவாவதை தவிர்க்க இயலாது. இருந்தாலும் இதைத்தாண்டி அவர் மீது பல விமர்சனஙக்ளும் வரலாற்று ஆய்வாளர்களினால் வைக்கப்படுகிறது.

ராஜராஜ சோழன் தன் ஆட்சி காலத்தின் பெரும்பகுதியை போர்களில் செலவிட்டவர். போர் கைதிகளைக் கொண்டே எல்லா கோவில்கள் கட்டப்பட்டது. மக்கள் மீது கூடுதலான வரி விதிக்கப்பட்டது. தமிழ் சைவ மரபினரை ஒதுக்கி காஷ்மீர சைவர்களை ஆதரித்தார். ஒரு காலகட்டத்தில் காஷ்மீர பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்தில் பலம் கொண்டவர்களாக இருந்தனர். சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உருவாகிட துனை போனார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றன.

ராஜராஜன் காலத்திற்குப் பிறகு தஞ்சை பெரியகோவில் பல நூற்றாண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. கோவில் கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ள பல பொருட்கள், சிலைகள் இப்போது இல்லை. அவை களவாடப் பட்டிருக்கலாம். பின்னாளில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் காலத்தில் கோவிலின் பெரும்பகுதி புதுப்பிக்கப்பட்டது. தற்போது இருக்கும் பெரிய நந்தியின் சிலையும் பின்னாளில் அமைக்கப்பட்டதுதான்.போர்ச்சுகீசியர்கள் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை வாடகைக்கு எடுத்து அதனை குதிரைகளை அடைத்து வைக்கும் லாயமாகவும், ஆயுதங்களை சேகரித்து வைக்கும் ஆயுதக் கிடங்காகவும் பயன்படுத்தினர். 




Popular posts from this blog

மதங்கள் என்ன செய்யும் !

மதங்கள் எதுவாக இருந்தாலும் அவை  இதைத்தான் செய்யும்.  சொல்லிவைத்தாற் போல அவை பிணங்களின் மீதே உயிர்த்தெழும். பிரிவினைகளில் உரம் பெறும். வெறுப்புகளே  அதன் வீரியம். ரத்தம் குடித்தே உயிர் வாழும். பெண்களை  போற்றாது, ஆனால் அங்கிருக்கும் பெண்கள் வரிந்து கட்டிக்க கொண்டு அதை போற்றுவார்கள். ஆனால்..... இந்த  மதங்களின் "அசட்டு" கடவுள்கள் மாய்ந்து மாய்ந்து அன்பை, சமத்துவத்தை, அறத்தை, அஹிம்சையை போதித்திருப்பார்கள் . அவற்றை இந்த மதங்கள் கண்டுகொள்வதும்  இல்லை, கவலைப்படுவதும் இல்லை. இதெல்லாம் தெரிந்தும் இந்த கடவுளர்களால் இன்று வரை மதங்களை எதுவும் செய்ய முடிவதில்லை. அதனாலேதான் அசட்டு கடவுள்கள் என்கிறேன். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்  எந்த ஒரு கடவுளும் மதச்சண்டைகளில் தன்னுடைய ஆட்களை  காப்பாற்றியதாக வரலாறு இல்லை. அதாவது மதங்களுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் போலத்தான் எல்லா கடவுளர்களும் இருக்கிறார்கள். இதை ஏனோ இந்த ஆவேச மதப்ரியர்கள்(எத்தனை நாளைக்குத்தான் மதவெறியர்கள் என்று எழுதுவது) புரிந்து கொள்வதில்லை.  சரி, இந்த கடவுளர்கள் தங்களுக்குள்ளாவது சண...

அழகரும் பின்னே ஞானும்ம்ம்ம்

நேற்று மாலை நான்கு மணி வரை மதுரைக்கு போகும் திட்டம் எதுவுமில்லை. ஒரு வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அழகர் என்னை மிஸ் பண்ணப் போகிறார் என்றே நினைத்திருந்தேன். சூழ்நிலைகள் மற்றும் வேலைகளின் காரணமாய் இந்த திருவிழா எல்லாம் முடிந்த பின்னால் ஊருக்குப் போகலாமென என்னையே சமாதானம் செய்து கொண்டிருந்தேன். தம்பியும், தங்கையும் இதே சிங்காரச் சென்னையில் ஆளுக்கு ஒரு பகுதியில் செட்டிலாகி இருந்தாலும், நாங்கள் ஆடிக்கொரு தடவை, அம்மாவாசைக்கு ஒரு தடவைதான் நேரில் பார்த்துக் கொள்கிறோம். அவரவர் வேலையில் அவ்வளவு பிஸியாக இருக்கிறோமாம். ஆனால் இரண்டு நாளைக்கொரு தடவை ஃபோனில் ஷேம லாபங்களை விசாரித்துக் கொள்வதுண்டு. அந்த வகையில் நான்கு மணி வாக்கில் தம்பி போனில் அழைத்து, “சாமி பார்க்கப் போகலாமா” எனக் கேட்டான்.  அவன் பற்ற வைத்த அந்த பொறி பற்றிக் கொண்டு எரிந்ததில் ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய ARC Travels ன் ஏஸி பஸ்ஸில் உட்கார்ந்திருந்தோம். காலையில் நாலு மணிக்கெல்லாம் கொண்டு மதுரை கொண்டு சேர்த்து விடுவதாய் கூறினர். ஆனால் பேருந்து சென்னையை விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதாகி இருந்தத...

2012

பத்துப் பதினைந்து வருடத்து முயற்சியில் ஒரு மலையுச்சிக்குப் போன மிதப்பில், கவனம் சிதறியோ அல்லது கால் இடறியோ தலை குப்புற விழுந்து, அந்த அடி தந்த காயத்தையும், அது தந்த வேதனையையும் உள் வாங்கி, நிதானித்து வலியோடு எழுந்து நின்றது 2011 என்றால், காயங்களை ஆற்றி மெல்ல இயல்புக்குத் திரும்பி மீண்டும் மலை உச்சியை நிமிர்ந்து பார்க்கவும், அதன் மீது மீண்டும் ஏறவும் தீர்மானித்தது 2012.  மெல்ல மெல்ல உயரம் போவது சாதனை, உயரத்தில் இருந்து தொபீரென கீழே விழுவது வேதனை....இரண்டையும் அனுபவிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்க்காது. இரண்டையும் பார்த்தாயிற்று.வெயிலின் அருமையை நிழலிலும், நிழலின் அருமையை வெயிலிலும் தெரிந்து கொண்ட வகையில் நான் பாக்கியவான்.  அந்த வகையில் இத்தோடு தொலைந்தான் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், அட அதற்குள் எழுந்து விட்டானே என்றவர்களுக்கு ஆச்சர்யத்தையும் தர முடிந்ததுதான் இந்த ஆண்டின் ஒரே சாதனை. புத்தாண்டில் இதையெல்லாம் செய்யப் போகிறேன் என இப்போது பட்டியலிடுவதை விடவும் , இந்த வருடத்தில் இதையெல்லாம் சாதித்திருக்கிறேனென  வருட முடிவில்  பதிவெழுதவே விரும்புகிற...