Skip to main content

பெட்ரோலிய விலை!.....விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!......ஏன்?, எப்படி?


மெனக் கெட்டு பதிவு எழுதுவதை விடவும், இது மாதிரி சட்டென தோன்றும் போது எழுதுவது சுலபமாயிருக்கிறது. 

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.7.50 உயர்த்தியிருக்கிறார்கள். என்னுடைய அனுமானம் சரியாக இருக்குமானால்,இந்த விலை உயர்வினால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு 10,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை 90.70 டாலர். ஒரு பேரல் என்பது சற்றேறக் குறைய 159 லிட்டர்கள். அந்த வகையில் பார்த்தால் ஒரு லிட்டர் கச்சா எண்ணையின் விலை 0.57 சென்ட் ஆகிறது. டாலருக்கு எதிரான இன்றைய ரூபாய் மதிப்பு 55.90 என்று வைத்துக் கொண்டாலும் கூட ஒரு லிட்டர் கச்சா எண்ணையின் இந்திய மதிப்பு ரூ.31.90 தான் ஆகிறது. 

ஒரு லிட்டர் பெட்ரோலை சுத்திகரிக்க 6.00 ரூபாய் செலவு பிடிக்கிறது. ஆக மொத்தம் நிகர உற்பத்திச் செலவு 37.90 தான் ஆகிறது. ஆனால் இன்றைய ஏழரை ரூபாய் விலை உயர்வுக்குப் பின்னர் பெட்ரோலின் விலை 80 ரூபாய் ஆகியிருக்கிறது.

பெட்ரோலின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை அரசு தன்னுடைய கட்டுப் பாட்டில் இருந்து எண்ணை நிறுவனங்களுக்கு தாரை வார்த்த பின்னரே, எண்ணை நிறுவனங்கள் தன்னிஷ்டத்துக்கு விலையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று எல்லா பழியும் எண்ணை நிறுவனங்களின் தலையில் விழுந்து கொண்டிருக்கிறது. உண்மையில் இந்த பிரச்சினையில் எண்ணை நிறுவனங்களுக்கு இனையான பழி அரசாங்கத்திடமும் இருக்கிறது.

ஒரு லிட்டர் கச்சா எண்ணையின் மீதான இறக்குமதி கலால் தீர்வையாக அரசு 15 ரூபாய் அளவில் வசூலிக்கிறது. அதன் பிறகு சுங்கத் தீர்வை என்கிற பெயரில் 7.5 சதவிகிதம் வசூலிக்கிறது.இப்போது இதன் மீதான மதிப்புக் கூட்டு வரி(VAT)/ விற்பனை வரி என்ற பெயரில் இன்னமொரு 20 சதவிகிதத்தை வசூலித்து விடுகிறது. ஒரே அரசின் வெவ்வேறு துறையினர் இந்த பணத்தை வரியாக வசூலிக்கும் அபத்தமான அரசாங்க அமைப்பு நம்முடையது.

பெட்ரோல் விலை(44.43)+ போக்குவரத்துச் செலவு(0.66)+மத்திய அரசு வரி (14.78 )+மாநில அரசு வரி(16.17)+ முகவர் கமிஷன்(1.50) = 77.54 (சென்னை விலை)

ஆக, கச்சா எண்ணையின் மீதான அரசாங்கத்தின் வருவாய் உறுதி செய்யப் பட்டுவிடுகிறது. எண்ணை நிறுவனங்களின் லாபம் உறுதி செய்யப் பட்டுவிடுகிறது. எண்ணை விற்கும் முகவர்களுக்கான கமிஷன் தொகை உறுதி செய்யப் பட்டுவிடுகிறது. இவை எல்லாமாய் சேர்த்து பயனாளர்களின் தலையில் 80 ரூபாயாக விடிகிறது.

யாரேனும் இது விஷயத்தை அரசிடம் தட்டிக் கேட்டுவிட்டால் இருக்கவே இருக்கிறது மானியம் தருகிறோம் என்கிற வழக்கமான சவ சவ பதில்தான் கிடைக்கும்.. மண்ணென்னைக்கும், எரிவாயுவுக்கும் இத்தனை கோடி மானியம் தருகிறோம் என்று சொல்லும் அரசு, அந்த பணத்தை நம்மிடம் விற்கும் பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கும் வரியின வருவாயில் இருந்தே கொடுக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஒரு பொருளின் மீதான அடக்க விலையின் மீது நூறு சதவிகிதம் லாபத்தை பல்வேறு வகைகளில் ஏற்றி விற்கும் கொடுமையை எங்கே போய் சொல்வது?. இதை எல்லாம் யார்தான் தட்டிக் கேட்பது?

Popular posts from this blog

மதங்கள் என்ன செய்யும் !

மதங்கள் எதுவாக இருந்தாலும் அவை  இதைத்தான் செய்யும்.  சொல்லிவைத்தாற் போல அவை பிணங்களின் மீதே உயிர்த்தெழும். பிரிவினைகளில் உரம் பெறும். வெறுப்புகளே  அதன் வீரியம். ரத்தம் குடித்தே உயிர் வாழும். பெண்களை  போற்றாது, ஆனால் அங்கிருக்கும் பெண்கள் வரிந்து கட்டிக்க கொண்டு அதை போற்றுவார்கள். ஆனால்..... இந்த  மதங்களின் "அசட்டு" கடவுள்கள் மாய்ந்து மாய்ந்து அன்பை, சமத்துவத்தை, அறத்தை, அஹிம்சையை போதித்திருப்பார்கள் . அவற்றை இந்த மதங்கள் கண்டுகொள்வதும்  இல்லை, கவலைப்படுவதும் இல்லை. இதெல்லாம் தெரிந்தும் இந்த கடவுளர்களால் இன்று வரை மதங்களை எதுவும் செய்ய முடிவதில்லை. அதனாலேதான் அசட்டு கடவுள்கள் என்கிறேன். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்  எந்த ஒரு கடவுளும் மதச்சண்டைகளில் தன்னுடைய ஆட்களை  காப்பாற்றியதாக வரலாறு இல்லை. அதாவது மதங்களுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் போலத்தான் எல்லா கடவுளர்களும் இருக்கிறார்கள். இதை ஏனோ இந்த ஆவேச மதப்ரியர்கள்(எத்தனை நாளைக்குத்தான் மதவெறியர்கள் என்று எழுதுவது) புரிந்து கொள்வதில்லை.  சரி, இந்த கடவுளர்கள் தங்களுக்குள்ளாவது சண...

அழகரும் பின்னே ஞானும்ம்ம்ம்

நேற்று மாலை நான்கு மணி வரை மதுரைக்கு போகும் திட்டம் எதுவுமில்லை. ஒரு வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அழகர் என்னை மிஸ் பண்ணப் போகிறார் என்றே நினைத்திருந்தேன். சூழ்நிலைகள் மற்றும் வேலைகளின் காரணமாய் இந்த திருவிழா எல்லாம் முடிந்த பின்னால் ஊருக்குப் போகலாமென என்னையே சமாதானம் செய்து கொண்டிருந்தேன். தம்பியும், தங்கையும் இதே சிங்காரச் சென்னையில் ஆளுக்கு ஒரு பகுதியில் செட்டிலாகி இருந்தாலும், நாங்கள் ஆடிக்கொரு தடவை, அம்மாவாசைக்கு ஒரு தடவைதான் நேரில் பார்த்துக் கொள்கிறோம். அவரவர் வேலையில் அவ்வளவு பிஸியாக இருக்கிறோமாம். ஆனால் இரண்டு நாளைக்கொரு தடவை ஃபோனில் ஷேம லாபங்களை விசாரித்துக் கொள்வதுண்டு. அந்த வகையில் நான்கு மணி வாக்கில் தம்பி போனில் அழைத்து, “சாமி பார்க்கப் போகலாமா” எனக் கேட்டான்.  அவன் பற்ற வைத்த அந்த பொறி பற்றிக் கொண்டு எரிந்ததில் ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய ARC Travels ன் ஏஸி பஸ்ஸில் உட்கார்ந்திருந்தோம். காலையில் நாலு மணிக்கெல்லாம் கொண்டு மதுரை கொண்டு சேர்த்து விடுவதாய் கூறினர். ஆனால் பேருந்து சென்னையை விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதாகி இருந்தத...

2012

பத்துப் பதினைந்து வருடத்து முயற்சியில் ஒரு மலையுச்சிக்குப் போன மிதப்பில், கவனம் சிதறியோ அல்லது கால் இடறியோ தலை குப்புற விழுந்து, அந்த அடி தந்த காயத்தையும், அது தந்த வேதனையையும் உள் வாங்கி, நிதானித்து வலியோடு எழுந்து நின்றது 2011 என்றால், காயங்களை ஆற்றி மெல்ல இயல்புக்குத் திரும்பி மீண்டும் மலை உச்சியை நிமிர்ந்து பார்க்கவும், அதன் மீது மீண்டும் ஏறவும் தீர்மானித்தது 2012.  மெல்ல மெல்ல உயரம் போவது சாதனை, உயரத்தில் இருந்து தொபீரென கீழே விழுவது வேதனை....இரண்டையும் அனுபவிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்க்காது. இரண்டையும் பார்த்தாயிற்று.வெயிலின் அருமையை நிழலிலும், நிழலின் அருமையை வெயிலிலும் தெரிந்து கொண்ட வகையில் நான் பாக்கியவான்.  அந்த வகையில் இத்தோடு தொலைந்தான் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், அட அதற்குள் எழுந்து விட்டானே என்றவர்களுக்கு ஆச்சர்யத்தையும் தர முடிந்ததுதான் இந்த ஆண்டின் ஒரே சாதனை. புத்தாண்டில் இதையெல்லாம் செய்யப் போகிறேன் என இப்போது பட்டியலிடுவதை விடவும் , இந்த வருடத்தில் இதையெல்லாம் சாதித்திருக்கிறேனென  வருட முடிவில்  பதிவெழுதவே விரும்புகிற...