Skip to main content

பதினாறாவது சென்னை புத்தகக் காட்சி....?

சென்னைக்கு இது 35 வது புத்தக கண்காட்சியாக இருக்கலாம். 1996 ல் இருந்து போய்க் கொண்டிருக்கும் எனக்கு இது பதினாறாவது புத்தக கண்காட்சி.:)

மகளுக்கு இன்று அரைநாள் பள்ளி, மகனுக்கோ விடுமுறை. மதியம் பள்ளியில் இருந்து மகளை அழைத்துக் கொண்டு நேரே புத்தகக் காட்சிக்கு போவதாக திட்டம். அண்ணா நகரில் மெட்ரோ ரயில் வேலைகள் தீவிரமாய் நடப்பதால் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல ஊரைச் சுற்றிக் கொண்டே பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடைய வேண்டும். இன்றைக்குப் பார்த்து என் ட்ரைவரும் லீவ்.

தொடர் ட்ராஃபிக் நெரிசலில் மெதுவே ஊர்ந்து கண்காட்சி நடக்கும் மைதானத்தை 1 மணி வாக்கில் எட்டினேன். திரும்பிய பக்கமெல்லாம் கார்கள். கார் நிறுத்த முப்பது ரூபாய். ஒரு வழியாய் இடத்தை தேடிப் பிடித்து வண்டியை நிறுத்தி புத்தகக் காட்சிக்குள் காலடி வைத்தோம்.




கடந்த 1996ல் இருந்து தொடர்ச்சியாக புத்தக கண்காட்சிக்கு சென்று கொண்டிருக்கிறேன்.ஒவ்வொரு வருடமும் உள்ளே நுழையும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏற்பாடுகளில் ஏதோவொரு நேர்த்திக் குறைவு ,அல்லது இன்னமும் நன்றாக செய்திருக்கலாமே என்கிற எண்ணம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை. குறைந்த பட்சம் பத்து முதல் பதினைந்து லட்சம் வரையில் பார்வையாளர்கள் வந்து போகக் கூடிய வகையில் ஏற்பாடுகள் இருக்கிறதா என்றால்!, நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்தால் சேதாரங்கள் பெரிய அளவில் இருக்கும் என்பது மட்டும் உண்மை.



வருடாவருடம் நடப்பதைப் போலவே இந்த வருடமும்  கடைகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஒரே மூச்சில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நடந்தாலும் இரண்டு மணி நேரம் சுற்றலாம். நவீன வேளாண்மை அரங்கில் இருந்து துவங்கினேன். நான் பார்த்த வரையில் இந்த வருடம் புதிய புத்தகங்கள் குறைவாக வந்திருப்பது போலவே தோன்றியது. நிறைய இளைஞர்கள் புத்தகம் வாங்க ஆரம்பித்திருக்கின்றனர். எல்லா கடைகளிலும் சொல்லி வைத்தாற்போல இளையோர் கூட்டம் அதிகமாய் இருக்கிறது. 

பெரியாரின் புத்தகங்களை நிறைய பேர் வாங்கிக் கொண்டிருந்தனர்.  முன்னாள் நாத்திகன் என்ற வகையில் இந்தக் காட்சி பார்ப்பதற்கே மகிழ்வாயிருந்தது.தமிழனுக்கு பகுத்தறிவை வளர்க்க இன்றைக்கும் பெரியாரை விட்டால் வேறு நாதியில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.



கல்லூரியில் என்னுடன் படித்த திருமதி ராஜி அவர்கள், சுற்றுப் புற சூழலை காக்க பெரிய அளவிளான இயக்கங்கள் தேவையில்லை, நம்மளவில் ஒவ்வொருவருமே சிறப்பான பங்களிப்பினை செய்திட முடியும் என்பதை வலியுறுத்தி நூலொன்றினை வெளியிட்டிருக்கிறார்.தமிழர்களுக்காக தமிழிலும், டமிலர்களுக்காக(!) ஆங்கிலத்திலும் இரு மொழிப் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார் தமிழில்.புத்தகத்தின் பெயர் “சின்னஞ்சிறு செயல்கள்....உங்கள் சுற்றுச்சூழலை காக்க....”,ஆங்கிலத்தில் /"One step at time for a sustainable environment",

இம் மாதிரியான முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும். முழுமையாக வாசித்த பின் ஒரு மதிப்புரையிட உத்தேசித்திருக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முப்பது வழிகளை ஆசிரியர் இந்த நூலில் வலியுறுத்தி இருக்கிறார். ஸ்டால் நம்பர் 136, வசந்தா பதிப்பகத்தில் கிடைக்கிறது. விலை 100 ரூபாய். அவசியம் வாங்கிட வேண்டிய புத்தகமாய் இதை பரிந்துரைக்கிறேன்.


கீழே இருக்கும் படத்தை அவசியம் சொடுக்கி பெரிதாக்கி பாருஙக்ள். எத்தனை நீளமான வரிசை....அறிவுப் பசியை போக்கவா இத்தனை நீள வரிசை யாரும் என நெகிழ்ந்து விடவேண்டாம். காட்சி அரங்கிற்கு வெளியே இருக்கும் ஃபுட்கோர்ட் ல் சாப்பிட காத்திருக்கும் உணவுப் பசியாளர்கள். இத்தனை பேர் வந்து போகுமிடத்துக்கு தேவையான வசதிகள் இல்லை என ஆரம்பத்தில் இதைத்தான் குறையாகச் சொன்னேன். 


அந்தக் காலத்து டூரிங்கொட்டாய் சினிமா அரங்கினை நினைவு படுத்தும் மகா மட்டமான அரங்க முகப்பு. பதிப்பாளர்களின் ரசனை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கான குறியீடாய் இந்த அரங்க வடிவமைப்பை பார்க்கிறேன்.


இன்று இரண்டு புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன்.....வாங்க வேண்டிய புத்தகங்களையும், ஸ்டால் எண்களையும் குறித்துக் கொண்டு வந்திருக்கிறேன். அடுத்த வாரம் போக வேண்டும். :)

Popular posts from this blog

மதங்கள் என்ன செய்யும் !

மதங்கள் எதுவாக இருந்தாலும் அவை  இதைத்தான் செய்யும்.  சொல்லிவைத்தாற் போல அவை பிணங்களின் மீதே உயிர்த்தெழும். பிரிவினைகளில் உரம் பெறும். வெறுப்புகளே  அதன் வீரியம். ரத்தம் குடித்தே உயிர் வாழும். பெண்களை  போற்றாது, ஆனால் அங்கிருக்கும் பெண்கள் வரிந்து கட்டிக்க கொண்டு அதை போற்றுவார்கள். ஆனால்..... இந்த  மதங்களின் "அசட்டு" கடவுள்கள் மாய்ந்து மாய்ந்து அன்பை, சமத்துவத்தை, அறத்தை, அஹிம்சையை போதித்திருப்பார்கள் . அவற்றை இந்த மதங்கள் கண்டுகொள்வதும்  இல்லை, கவலைப்படுவதும் இல்லை. இதெல்லாம் தெரிந்தும் இந்த கடவுளர்களால் இன்று வரை மதங்களை எதுவும் செய்ய முடிவதில்லை. அதனாலேதான் அசட்டு கடவுள்கள் என்கிறேன். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்  எந்த ஒரு கடவுளும் மதச்சண்டைகளில் தன்னுடைய ஆட்களை  காப்பாற்றியதாக வரலாறு இல்லை. அதாவது மதங்களுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் போலத்தான் எல்லா கடவுளர்களும் இருக்கிறார்கள். இதை ஏனோ இந்த ஆவேச மதப்ரியர்கள்(எத்தனை நாளைக்குத்தான் மதவெறியர்கள் என்று எழுதுவது) புரிந்து கொள்வதில்லை.  சரி, இந்த கடவுளர்கள் தங்களுக்குள்ளாவது சண...

அழகரும் பின்னே ஞானும்ம்ம்ம்

நேற்று மாலை நான்கு மணி வரை மதுரைக்கு போகும் திட்டம் எதுவுமில்லை. ஒரு வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அழகர் என்னை மிஸ் பண்ணப் போகிறார் என்றே நினைத்திருந்தேன். சூழ்நிலைகள் மற்றும் வேலைகளின் காரணமாய் இந்த திருவிழா எல்லாம் முடிந்த பின்னால் ஊருக்குப் போகலாமென என்னையே சமாதானம் செய்து கொண்டிருந்தேன். தம்பியும், தங்கையும் இதே சிங்காரச் சென்னையில் ஆளுக்கு ஒரு பகுதியில் செட்டிலாகி இருந்தாலும், நாங்கள் ஆடிக்கொரு தடவை, அம்மாவாசைக்கு ஒரு தடவைதான் நேரில் பார்த்துக் கொள்கிறோம். அவரவர் வேலையில் அவ்வளவு பிஸியாக இருக்கிறோமாம். ஆனால் இரண்டு நாளைக்கொரு தடவை ஃபோனில் ஷேம லாபங்களை விசாரித்துக் கொள்வதுண்டு. அந்த வகையில் நான்கு மணி வாக்கில் தம்பி போனில் அழைத்து, “சாமி பார்க்கப் போகலாமா” எனக் கேட்டான்.  அவன் பற்ற வைத்த அந்த பொறி பற்றிக் கொண்டு எரிந்ததில் ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய ARC Travels ன் ஏஸி பஸ்ஸில் உட்கார்ந்திருந்தோம். காலையில் நாலு மணிக்கெல்லாம் கொண்டு மதுரை கொண்டு சேர்த்து விடுவதாய் கூறினர். ஆனால் பேருந்து சென்னையை விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதாகி இருந்தத...

2012

பத்துப் பதினைந்து வருடத்து முயற்சியில் ஒரு மலையுச்சிக்குப் போன மிதப்பில், கவனம் சிதறியோ அல்லது கால் இடறியோ தலை குப்புற விழுந்து, அந்த அடி தந்த காயத்தையும், அது தந்த வேதனையையும் உள் வாங்கி, நிதானித்து வலியோடு எழுந்து நின்றது 2011 என்றால், காயங்களை ஆற்றி மெல்ல இயல்புக்குத் திரும்பி மீண்டும் மலை உச்சியை நிமிர்ந்து பார்க்கவும், அதன் மீது மீண்டும் ஏறவும் தீர்மானித்தது 2012.  மெல்ல மெல்ல உயரம் போவது சாதனை, உயரத்தில் இருந்து தொபீரென கீழே விழுவது வேதனை....இரண்டையும் அனுபவிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்க்காது. இரண்டையும் பார்த்தாயிற்று.வெயிலின் அருமையை நிழலிலும், நிழலின் அருமையை வெயிலிலும் தெரிந்து கொண்ட வகையில் நான் பாக்கியவான்.  அந்த வகையில் இத்தோடு தொலைந்தான் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், அட அதற்குள் எழுந்து விட்டானே என்றவர்களுக்கு ஆச்சர்யத்தையும் தர முடிந்ததுதான் இந்த ஆண்டின் ஒரே சாதனை. புத்தாண்டில் இதையெல்லாம் செய்யப் போகிறேன் என இப்போது பட்டியலிடுவதை விடவும் , இந்த வருடத்தில் இதையெல்லாம் சாதித்திருக்கிறேனென  வருட முடிவில்  பதிவெழுதவே விரும்புகிற...