Skip to main content

பிரிந்தவர் மீண்டும்...!

இன்று எதையோ தேடிக் கொண்டிருந்த போது பைரனின் இந்த கவிதையை வாசிக்க நேர்ந்தது.

"If I should meet you after a long time
How should I greet thee?
With silence and tears."
-Byron

பள்ளி நாட்களில் ஆங்கில கவிதைகளை மனப் பாடப் பகுதியாக அணுக நேர்ந்த கசப்புணர்வு, இன்னமும் அவற்றின் அழகியலை அணுக விடுவதில்லை.அதில் எனக்கு பெரிதாய் வருத்தமும் இருந்ததில்லை.ஆங்கிலத்தை விடவும் தமிழில் தேவைக்கு அதிகமாகவே அழகியல் சார்ந்த கவித்துவம் நிறைந்திருக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

எழுத வந்ததில் இருந்து திசை மாறிச் செல்கிறேன்....

மேலே சொன்ன கவிதையை படித்த போது கவியரசு கண்ணதாசனும் இதே மாதிரியான வரிகளை எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அவர் பைரனின் இந்த கவிதைகளை படித்திருக்கலாம், அல்லது சுயமாய் அனுபவித்து எழுதியிருக்கலாம். பாலும் பழமும் திரைப் படத்தில் வரும் “காதல் சிறகை காற்றினில் விரித்து” என்று துவங்கும் பாடலில் வரும் இந்த வரிகள்தான் அவை...

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி,
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி


இரண்டு பேருமே அநேகமாய் ஒரே உணர்வைத்தான் தங்களின் படைப்புகளில் வடித்தெடுத்திருக்கின்றனர்.மொழியின் எளிமையும்,கருத்தின் அடர்த்தியிலும் கூட இருவரும் ஒரே மாதிரியாக அணுகியிருப்பதாய் உணர்கிறேன்.

இனி பைரனின் கவிதைகளில் தேடி வாசிக்கவேண்டும்.

பிற்சேர்க்கை: கவிச் சக்கரவர்த்தி கம்பரும் கூட இதே நயத்தில் ஓர் பாடலை எழுதியிருக்கிறார்.

“கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ”

Popular posts from this blog

மதங்கள் என்ன செய்யும் !

மதங்கள் எதுவாக இருந்தாலும் அவை  இதைத்தான் செய்யும்.  சொல்லிவைத்தாற் போல அவை பிணங்களின் மீதே உயிர்த்தெழும். பிரிவினைகளில் உரம் பெறும். வெறுப்புகளே  அதன் வீரியம். ரத்தம் குடித்தே உயிர் வாழும். பெண்களை  போற்றாது, ஆனால் அங்கிருக்கும் பெண்கள் வரிந்து கட்டிக்க கொண்டு அதை போற்றுவார்கள். ஆனால்..... இந்த  மதங்களின் "அசட்டு" கடவுள்கள் மாய்ந்து மாய்ந்து அன்பை, சமத்துவத்தை, அறத்தை, அஹிம்சையை போதித்திருப்பார்கள் . அவற்றை இந்த மதங்கள் கண்டுகொள்வதும்  இல்லை, கவலைப்படுவதும் இல்லை. இதெல்லாம் தெரிந்தும் இந்த கடவுளர்களால் இன்று வரை மதங்களை எதுவும் செய்ய முடிவதில்லை. அதனாலேதான் அசட்டு கடவுள்கள் என்கிறேன். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்  எந்த ஒரு கடவுளும் மதச்சண்டைகளில் தன்னுடைய ஆட்களை  காப்பாற்றியதாக வரலாறு இல்லை. அதாவது மதங்களுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் போலத்தான் எல்லா கடவுளர்களும் இருக்கிறார்கள். இதை ஏனோ இந்த ஆவேச மதப்ரியர்கள்(எத்தனை நாளைக்குத்தான் மதவெறியர்கள் என்று எழுதுவது) புரிந்து கொள்வதில்லை.  சரி, இந்த கடவுளர்கள் தங்களுக்குள்ளாவது சண...

அழகரும் பின்னே ஞானும்ம்ம்ம்

நேற்று மாலை நான்கு மணி வரை மதுரைக்கு போகும் திட்டம் எதுவுமில்லை. ஒரு வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அழகர் என்னை மிஸ் பண்ணப் போகிறார் என்றே நினைத்திருந்தேன். சூழ்நிலைகள் மற்றும் வேலைகளின் காரணமாய் இந்த திருவிழா எல்லாம் முடிந்த பின்னால் ஊருக்குப் போகலாமென என்னையே சமாதானம் செய்து கொண்டிருந்தேன். தம்பியும், தங்கையும் இதே சிங்காரச் சென்னையில் ஆளுக்கு ஒரு பகுதியில் செட்டிலாகி இருந்தாலும், நாங்கள் ஆடிக்கொரு தடவை, அம்மாவாசைக்கு ஒரு தடவைதான் நேரில் பார்த்துக் கொள்கிறோம். அவரவர் வேலையில் அவ்வளவு பிஸியாக இருக்கிறோமாம். ஆனால் இரண்டு நாளைக்கொரு தடவை ஃபோனில் ஷேம லாபங்களை விசாரித்துக் கொள்வதுண்டு. அந்த வகையில் நான்கு மணி வாக்கில் தம்பி போனில் அழைத்து, “சாமி பார்க்கப் போகலாமா” எனக் கேட்டான்.  அவன் பற்ற வைத்த அந்த பொறி பற்றிக் கொண்டு எரிந்ததில் ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய ARC Travels ன் ஏஸி பஸ்ஸில் உட்கார்ந்திருந்தோம். காலையில் நாலு மணிக்கெல்லாம் கொண்டு மதுரை கொண்டு சேர்த்து விடுவதாய் கூறினர். ஆனால் பேருந்து சென்னையை விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதாகி இருந்தத...

2012

பத்துப் பதினைந்து வருடத்து முயற்சியில் ஒரு மலையுச்சிக்குப் போன மிதப்பில், கவனம் சிதறியோ அல்லது கால் இடறியோ தலை குப்புற விழுந்து, அந்த அடி தந்த காயத்தையும், அது தந்த வேதனையையும் உள் வாங்கி, நிதானித்து வலியோடு எழுந்து நின்றது 2011 என்றால், காயங்களை ஆற்றி மெல்ல இயல்புக்குத் திரும்பி மீண்டும் மலை உச்சியை நிமிர்ந்து பார்க்கவும், அதன் மீது மீண்டும் ஏறவும் தீர்மானித்தது 2012.  மெல்ல மெல்ல உயரம் போவது சாதனை, உயரத்தில் இருந்து தொபீரென கீழே விழுவது வேதனை....இரண்டையும் அனுபவிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்க்காது. இரண்டையும் பார்த்தாயிற்று.வெயிலின் அருமையை நிழலிலும், நிழலின் அருமையை வெயிலிலும் தெரிந்து கொண்ட வகையில் நான் பாக்கியவான்.  அந்த வகையில் இத்தோடு தொலைந்தான் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், அட அதற்குள் எழுந்து விட்டானே என்றவர்களுக்கு ஆச்சர்யத்தையும் தர முடிந்ததுதான் இந்த ஆண்டின் ஒரே சாதனை. புத்தாண்டில் இதையெல்லாம் செய்யப் போகிறேன் என இப்போது பட்டியலிடுவதை விடவும் , இந்த வருடத்தில் இதையெல்லாம் சாதித்திருக்கிறேனென  வருட முடிவில்  பதிவெழுதவே விரும்புகிற...